காஞ்சிபுரம்
சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பம் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட மின்வயரில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்து எரித்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே பூமிக்கு அடியில் செல்கின்ற மின் வயர் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சார கேபிள் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதில் மின்கம்பத்திற்கு செல்கின்ற வயர்கள் அனைத்தும் எரிந்து கருகியது. மேலும் கேபிள் அனைத்தும் மளமளவென எரிந்து மின்கம்பத்தில் பரவியது. மின் கம்பத்தில் உள்ள வயர்கள் எரிந்து கம்பத்தின் உச்சியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளையும் எரித்தது. இதை பார்த்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர்.
இதனால் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டது. மேலும் தொடர் கன மழை பெய்து வரும் இந்த வேளையில் திடீரென மின்கம்பம் தீப்பிடித்து எரிந்த இந்தக் காட்சி அங்குள்ள மக்களை பதைபதைக்க வைத்தது. மின்கம்பத்தி்ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகளும் மருத்துவ பணியாளர்களும் அவதிக்குள்ளானார்கள். இதை சரி செய்யும் பணி மழையால் தாமதம் ஆகிறது.