தஞ்சாவூர்
மின் தகன மேடை அமைக்க வேண்டும்
|திருச்சிற்றம்பலத்தில் உள்ள பொது மயானத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்:
பொது மயானம்
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சி கண்ணா குளக்கரையில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தின் வாயிலாக, திருச்சிற்றம்பலம் பகுதியில் இறப்பவர்களுக்கு இறுதி சடங்குகள் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மயானம் அமைந்துள்ள இடத்தின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, மயானத்திற்கான இடத்தை அடையாளப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் தகன மேடை
மேலும், திருச்சிற்றம்பலம் பகுதி பெரும்பாலான விவசாய தொழிலாளர்களை கொண்ட பகுதியாகவும் அதிகமான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.இந்த நிலையில் தங்களது உறவினர்கள் இறக்கும் போது அவர்களை மயானத்தில் எரியூட்டுவதற்கு விறகு போன்றவற்றை வாங்கி சேர்ப்பதற்கு ் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, மக்கள் தொகையின் நெருக்கம், மற்றும் முக்கிய அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி, திருச்சிற்றம்பலம் கண்ணா குளக்கரையில் உள்ள பொதுமயானத்திற்கு மின் தகன மேடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.