பள்ளியில் மலர்ந்த ஜனநாயகம்..! தலைவர் பதவிக்கு ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்..!
|கோவை அருகே உள்ள பள்ளியில் மாணவர் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
கோவை:
கோவை கோட்டைமேடு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர் தேர்தல் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. அன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.
இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத்துறை தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், சுற்றுச்சூழல் துறை தலைவர் ஆகிய பதவிகளுக்காக மாணவர்கள் போட்டியிட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் 4 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். வாக்களித்த மாணவர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் 138 மாணவர்கள், 6 ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் ஒருவர், கல்வி அதிகாரி ஒருவர் , பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் 118 பேர் என மொத்தம் 285 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை வரை நடந்தது.
இந்த தேர்தல் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
மாணவர்களுக்கு ஜனநாயக மாண்பை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலைமையில் மாதந்தோறும் ஒரு கூட்டம் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடமையை சரியாக செய்யாவிட்டால் அவர்கள் மீது மாணவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள். இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாக்கு எண்ணிக்கை வரும் 8-ந் தேதி எண்ணபடுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 11-ந் தேதி பதிவு பிரமாணம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.