திருவள்ளூர்
போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
|திருத்தணியில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை சேர்ந்தவர் சரோஜா (வயது 82). இவர் நேற்று முன்தினம் திருத்தணி மார்க்கெட்டில் பூ வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மா.பொ.சி. சாலையில் உள்ள பிரபல நகைக்கடை அருகே சரோஜா சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் தங்களை போலீஸ் என சரோஜாவிடம் கூறி, மூதாட்டியை அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு நபரிடம் அழைத்துச் சென்றனர்.
அவர் தன்னை இன்ஸ்பெக்டர் என மூதாட்டியிடம் அறிமுகம் செய்து கொண்டு, திருத்தணியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. எனவே கழுத்தில் நகைகள் அணிந்திருந்தால் திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள். எனவே நகையை கழட்டி கைபையில் வையுங்கள் என கூறினார்.
அதை நம்பிய மூதாட்டி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை கழட்டி பையில் வைக்க முயன்றபோது அதை பிடிங்கி கொண்டு 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் 3 பேரும் தப்பிச் சென்றனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சரோஜா திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் என கூறி மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.