< Back
மாநில செய்திகள்
மகன், மருமகள் துன்புறுத்துவதாக வயதான தம்பதி கலெக்டரிடம் புகார் மனு
வேலூர்
மாநில செய்திகள்

மகன், மருமகள் துன்புறுத்துவதாக வயதான தம்பதி கலெக்டரிடம் புகார் மனு

தினத்தந்தி
|
26 Dec 2022 11:01 PM IST

மகன், மருமகள் துன்புறுத்துவதாக கலெக்டரிடம் வயதான தம்பதி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட 320 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக குறைதீர்வு அலுவலகத்துக்கு வந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் தோட்டப்பாளையம் அருகதம்பூண்டியை சேர்ந்தவர் ராமு (வயது 84). இவரது மனைவி மீனாட்சி (69) ஆகியோர், தங்களை மகன் மற்றும் மருமகள் துன்புறுத்துவதாக கண்ணீர்மல்க புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் எனது மகனும், மருமகளும் சேர்ந்து வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். மேலும் எங்கள் பெயரில் உள்ள வீட்டுமனை அசல் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதன் நகலை எங்களிடம் கொடுத்தனர். எங்களை விட்டு அவர்கள் சென்று விட்டனர். இதனால் நாங்கள் இருவரும் வாடகை வீட்டில் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனவே எங்களது வீட்டுமனை அசல் பத்திரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி துன்புறுத்துவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பாதை வசதி வேண்டும்

வேலூர் அருகே சோழவரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், சோழவரம் கிராமத்தில் நந்திகம்பீஸ்வரர் கோவில் உள்ளது. பழைமைவாய்ந்த இந்த கோவிலை நாங்கள் புனரமைத்து வருகிறோம். கோவிலுக்கு செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதை தொடர்பான ஆக்கிரமிப்பை அகற்றி கோவிலுக்கு செல்ல வழிவகை செய்து செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பணியின் போது மரணமடைந்த அரசு பணியாளர் மாணிக்கம் என்பவரது மகன் சுரேசுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தாசில்தார் (நீதியியல்) பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்