சென்னை
ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் மருத்துவ சுற்றுலாவில் வந்த வங்காளதேச முதியவருக்கு சிகிச்சை
|முதல் முறையாக மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் வந்த வங்காளதேச முதியவருக்கு ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பணமின்றி தவித்த அவருக்கு அரசு டாக்டர்கள் ஆயுளை நீட்டித்து கொடுத்துள்ளனர்.
சென்னை,
வங்காளதேச நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் கண்டோகர் (வயது 67). நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் மருத்துவ சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு சிகிச்சைக்காக வந்தார். இங்கு உள்ள ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16-ந் தேதி சென்றார். அங்கு சிகிச்சைக்கான கட்டணத்தை கேட்டதும் அப்துல் மாலிக் கண்டோகர் அதிர்ச்சியடைந்தார். அவ்வளவு தொகை தன்னால் செலவழிக்கமுடியாது என்று கருதினார்.
அதேசமயத்தில் சென்னையிலேயே தங்கியிருந்து குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை பெறுவதற்காக விரும்பினார். உடனே அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அப்துல் மாலிக் கண்டோகரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழக அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெறுவோரிடம் குறிப்பிட்ட அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அந்த தொகை அப்துல் மாலிக் கண்டோகரிடம் இருந்தும் பெறப்பட்டது. அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து வழங்கினார்கள். அப்துல் மாலிக் கண்டோகர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமோடு இருக்கிறார். அரசு டாக்டர்கள் அவருக்கு ஆயுளை நீட்டித்து கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணி ராஜன் கூறியதாவது:-
வெளிநாட்டு பயணி ஒருவர் மருத்துவ சுற்றுலா விசா மூலம் வந்து எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது இதுவே முதல்முறை. சிகிச்சைக்கு பின்னர் அப்துல் மாலிக் கண்டோகர் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதியிலிருந்து கடந்த 20-ந் தேதி வரையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 42 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக வங்காளதேசத்தில் இருந்து மட்டும் 26 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் இருந்து 6 பேரும், கானா நாட்டில் இருந்து 5 பேரும், இலங்கையில் இருந்து 2 பேரும், லைபீரியா, அங்கோலா, கினியா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.