திருச்சி
தற்கொலை செய்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி
|தற்கொலை செய்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமயபுரம்:
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகலங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன் என்ற கந்தசாமி. விவசாயி. இவரது மகன் அஜித் (வயது 25). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் அரளி விதையை அரைத்து குடித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடியில் உள்ள தனது உறவினரான சசிகலா என்பவரது வீட்டிற்கு அஜித் நேற்று முன் தினம் வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால், சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? உறவினர் வீட்டிற்கு வந்து அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.