< Back
மாநில செய்திகள்
ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் பணி வழங்கக்கோரி வந்தே பாரத் ரெயிலை மறிக்க முயற்சி
சென்னை
மாநில செய்திகள்

ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் பணி வழங்கக்கோரி வந்தே பாரத் ரெயிலை மறிக்க முயற்சி

தினத்தந்தி
|
21 July 2023 4:45 PM IST

ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் பணி வழங்கக்கோரி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல்

தெற்கு ரெயில்வே மற்றும் ஐ.சி.எப். தொழிற்சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தொழில் பழகுநர் என்று கூறப்படும் 'அப்ரண்டீஸ்' பயிற்சி முடித்து 17 ஆயிரம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். அப்போது, வேலை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ரெயில் நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வந்தே பாரத் ரெயிலை மறித்து போராட்டம் செய்ய முயன்றனர். இதையடுத்து, அங்கு இருந்த ரெயில்வே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.பி., பொன்ராமு, தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல, ரெயில்வே அதிகாரிகளுடன் 5 பேர் கொண்ட மாணவர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்தியது. இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், உடனடியாக முடிவெடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

உண்ணாவிரதம்

ரெயில்வே துறையில் அனைத்து மண்டலங்களிலும், அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் பணியில் அமர்த்தி வருகின்றனர். ஆனால், தெற்கு ரெயில்வே மற்றும் ஐ.சி.எப்.இல் மட்டும் வேலை கொடுக்காமல் எங்களை புறக்கணித்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

தெற்கு ரெயில்வேயின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ரெயில்வே அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, ரெயில் நிலையத்திற்குள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்