< Back
மாநில செய்திகள்
மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம் - அண்ணாமலை கண்டனம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம் - அண்ணாமலை கண்டனம்

தினத்தந்தி
|
15 May 2024 5:46 PM IST

மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் மூடப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை தாரைவார்த்தது, அதன் மூலம், நாற்பது ஆண்டுகளாக தமிழக மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும், கொல்லப்படும்போதும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கூட்டணியில் இருந்தும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என தொடர்ச்சியாக தமிழக மீனவ சமுதாயத்துக்குத் துரோகம் இழைத்து வந்த தி.மு.க., தற்போது மீண்டும் ஒரு துரோகத்தை இழைத்திருக்கிறது.

தேர்தல் வரும்போது மட்டுமே தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்ற முயல்வது தி.மு.க.வுக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் நடைப்பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. ராமேஸ்வரம் பொதுமக்களிடையே அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், முதல்-அமைச்சர் ஸ்டாலின், உடனே ராமேஸ்வரம் சென்று, மீனவ சமுதாயத்துக்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள், மீனவ மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த தி.மு.க.வைச் செயல்பட வைக்க, தமிழக பா.ஜ.க.வின் என் மண் என் மக்கள் நடைப்பயண தொடக்க விழா முழு காரணமாக அமைந்தது. பொதுமக்கள், பா.ஜ.க.வின் பக்கம் திரும்புவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், முதல்-அமைச்சர் ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு, சுனாமி தாக்குதலில் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயப் பெருமக்களுக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், பொருளாதார இழப்புகளை ஈடு செய்யவும், அரசுத் துறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாயத் தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து செயல்படும் வண்ணம், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, அரசாணை எண் 215-ன் படி, தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 236 கடலோர ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பலனடைந்து வந்தனர். முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு நடத்திய ராமேஸ்வரம் மீனவர் மாநாட்டிற்காக மட்டும் இந்த சங்கம் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் முடக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, எந்தவிதப் பணிகளும் நடைபெறாமல் முடக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கம், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த 15.03.2024 அன்று, மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15.03.2024 தேதியிட்ட அரசாணை எண் 66-ன் படி, எவ்வித காரணங்களும் குறிப்பிடாமல், மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கம் மூடப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, இந்தச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் சார்பான மூன்று வழக்குகள், சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் நிலுவையில் இருக்கையில், அவசர அவசரமாக தி.மு.க. அரசு இந்தச் சங்கத்தை மூட முடிவெடுத்திருப்பது. பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல், சுமார் 15 ஆண்டுகளாக, சுனாமியால் பாதிப்புக்குள்ளான மீனவ சமுதாய மக்கள் நலனுக்காகவும், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக மேற்கொண்ட நிதிச் செலவுகளும், தி.மு.க. அரசின் இந்த முடிவால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தினை மூட முடிவெடுத்திருப்பதன் பின்னணி என்ன என்பதை தி.மு.க. அரசு கடலோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மீனவ சமுதாய மக்கள் மேம்பாட்டுக்காகக் கொண்டு வந்த மத்ஸ்ய சம்பதா உள்ளிட்ட திட்டங்கள் மூலம், மீனவ சமுதாய மக்கள் பெரிதும் பலனடைந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. மத்திய அரசுக்குத் துணையாகச் செயல்பட வேண்டிய தமிழக அரசு, அதற்கு முட்டுக்கட்டை இடுவது போல, செயல்பாட்டில் இருக்கும் நலச்சங்கங்களை முடக்குவது, கடலோரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில், தி.மு.கவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. தி.மு.க. அரசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து, மீனவ சமுதாய மக்கள் அறிவித்த போராட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல், கைது செய்வோம் என்று மிரட்டுவது, மீனவ சகோதரர்கள் மீது தி.மு.க.வின் வஞ்சத்தையும் வெளிப்படுத்துகிறது.

மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. அரசின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தினை மூடுவதாக வெளியிட்டிருக்கும் அரசாணை எண் 66, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்