எம்.எஸ்.டோனியின் தீவிர ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை
|கோபி கிருஷ்ணன் தீவிர டோனி ரசிகர் என்பதால் வீடு முழுவதும் டோனி படத்தை வரைந்துள்ளார்.
அரங்கூர்:
கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன. கோபி கிருஷ்ணன் தீவிர டோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார். மேலும் வீடு முழுவதும் டோனி படத்தை வரைந்துள்ளார். வீடு முழுவதும் டோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் டோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை தினமும் பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநத்தம் போலீசார் கோபி கிருஷ்ணனின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபி கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
டோனியின் தீவிர ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.