ராமநாதபுரம்
வயலில் கிடந்த பழங்கால சாமி சிலை
|திருவாடானை அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சாமி உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.
தொண்டி
திருவாடானை அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சாமி உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.
சாமி சிலை
திருவாடானை தாலுகா, தேளூர் ஊராட்சி சேனவயல் கிராமத்தில் உள்ள கண்மாய் அருகில் உள்ள வயலில் உலோகத்தினாலான சாமி சிலை கிடந்தது.
இதுகுறித்து அறிந்த தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா கணேசன் மற்றும் மல்லனூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் யாகப்பன், தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியில் கிடந்த ஒன்றரை அடி உயரமுள்ள சிதிலமடைந்த உலோக சிலையை மீட்டனர். பின்னர் அந்த சிலையை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
சேனவயல் கிராமத்தில் ஒரு காலத்தில் சிவன், பெருமாள் கோவில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்ததாகவும் தற்போது விவசாய நிலங்களில் உழவு பணியை மேற்கொள்ளும் போது இது போன்ற கற்சிலைகள், உலோக சிலைகள் கிடைத்து வருவதாகவும், கடந்த ஆண்டு கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே மதுரை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
12-ம் நூற்றாண்டு
இதுபற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேலு, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு ஆகியோர் கூறியதாவது:- இது பிற்கால பாண்டியர் 12-13-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்தி சிற்பம். 2 கைகள், கரண்ட மகுடம், நெற்றிச்சுட்டி, காதுகளில் தொங்கும் வளையங்கள், கைகளில் கைவளையல் களுடன் உள்ளது.
வலது கை உடைந்துள்ளது. அதில் பூச்செண்டு அல்லது உசிநிசம் காட்டி இருத்தல் வேண்டும். மார்பில் புரிநூல் செல்கிறது. குஜ பந்தம் இல்லா நிலை. இடது கை கத்ய வலம்பிதம் போல் கஜ ஹஸ்தம் திரிபங்க நிலையில் பார்வதி (சக்தி). தனி அம்மன் வட்ட வடிவ பின் ஆலவட்டம். வட்ட வடிவ பீடத்தில் திரிபங்கமாக நிற்கின்றார். கீழாடை அழகான மடிப்புகளுடன் கணுக்கால் வரை கீழிறங்கி செல்கிறது. வயிற்றை சுற்றி தடித்த கடிபந்தம். உயர் அணிகலன்கள் தொடை வரை தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.