தஞ்சாவூர்
கீழவாசல் மீன்மார்க்கெட்டுக்குவாகனங்கள் வந்து செல்வதற்கு மாற்றுவழி
|கீழவாசல் மீன்மார்க்கெட்டுக்குவாகனங்கள் வந்து செல்வதற்கு மாற்றுவழி
தஞ்சை கீழவாசல் மீன்மார்க்கெட் பகுதிக்கு வாகனங்கள் வந்து செல்ல மாற்றுபாதை ஏற்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
கீழவாசல் மீன்மார்க்கெட்
தஞ்சை கீழவாசல் பகுதியில் மீன் மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாகை, ராமேஸ்வரம், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மீன்கள், நண்டு போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மார்க்கெட் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுவதாக மாநகராட்சிக்கு எராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து மீன்மார்க்கெட் மொத்த வியாபாரிகளுடன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட், வருவாய் அலுவலர் சங்கரவடிவேல், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மீன் மொத்த வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுப்பாதை வேண்டும்
கூட்டத்தில் வியாபாரிகள், மாநகராட்சிக்கு ஒரே பகுதி வழியாக வாகனங்கள் வந்து செல்வதால் சிரமமாக உள்ளது. எனவே மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு ஆணையர், சரவணகுமார், வாகனங்கள் வருவதற்கு ஒரு வழியும், செல்வதற்கு ஒரு வழியும் என மாற்றுப்பாதை உடனடியாக ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும் மீன்மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்கள் உரிய நுழைவு கட்டணம் செலுத்துவதில்லை. அவை முறையாக செலுத்த வேண்டும். வாகனங்களில் உள்ள ஒவ்வொரு மீன்பெட்டிக்கும், ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். மீன்மார்க்கெட்டுக்கு தேவையான வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. அனால் வருவாய் முறையாக வருவதில்லை. எனவே வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்து, உரிய கட்டணத்தை செலுத்தும் போது மாநகராட்சி சார்பிலும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.மேலும் சுகாதாரகேடு தொடர்பான புகார்களுக்கு இடமளிக்கக்கூடாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.