கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
|கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90% அடிப்படை வசதியை செய்துள்ளோம். வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டி வரும் புதிய பேருந்து நிறுத்தம் இடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.