< Back
மாநில செய்திகள்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
மதுரை
மாநில செய்திகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு

தினத்தந்தி
|
5 May 2023 1:18 AM IST

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு நடத்தினார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு நடத்தினார்.

கள்ளழகர்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இதனையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தினை தமிழக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மாலை ஆய்வு நடத்தினார்.

மேலும், அழகர் ஆற்றில் இறங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து சீரமைப்பு போன்றவைகள் குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாநகர துணை கமிஷனர்கள் அரவிந்த், சாய் பிரனீத் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் ஒரே இடத்தில் கூட இருக்கின்றனர். இதன் காரணமாக மதுரை நகர், புறநகர் போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வைகை ஆற்றுப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல், டிரோன் கேமராக்கள் மூலமும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதி நவீன வசதிகளுடன்...

குறிப்பாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்படுகிறது. இந்த கேமராக்கள், ஆட்களின் முகத்தையும் ஸ்கேன் செய்து அருகில் உள்ள கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும் வசதி கொண்டது. அவை ஸ்கேன் செய்யும் போது, ஏதேனும் சந்தேகம் உள்ள நபர்களின் முகம் பதிவாகி இருந்தால் அவர்கள் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவார்கள்.

இதற்கு வசதியாக ஆற்றின் கரை பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த அதிநவீன வசதி கொண்ட டிரோன் கேமராக்கள் உதவி செய்யும்.

இதுபோல் சீருடை அணியாத போலீசாரும் வைகை ஆற்று பகுதி மட்டுமின்றி, ஆற்றின் உள்பகுதியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்