< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ் நிலையம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ் நிலையம்

தினத்தந்தி
|
29 Sept 2023 11:48 PM IST

பெரம்பலூரில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகர்மன்றத்தின் இந்த மாதத்திற்கான சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது துறைமங்கலத்தில் இருந்து நெடுவாசல் வரை உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் விவசாய நிலங்களில் தேங்குவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தார்சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் தீட்ட வேண்டும். நகர்பகுதியில் டெண்டர் விடப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர்ப்பகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். காவிரி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் கோரிக்கை குறித்து பேசும் போது கவுன்சிலர்களுக்கும், நகராட்சி அதிகாரிக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள நகராட்சி அறிவுசார் மையத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ய அனுமதி பெறப்பட்டது.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த தார் சாலையை ரூ.22 லட்சத்தில் சீரமைக்க அனுமதி பெறப்பட்டது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரூ.3 கோடியே 72 லட்சத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது, என்பன உள்ளிட்ட 14 பொருட்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 3 தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்