நீலகிரி
ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது
|கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
ஆவின் இனிப்புகள்
தமிழக பால்வளத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்புகள் விற்பனை தொடக்க விழா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆவின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பால் தரம் பார்க்கும் கருவிகள், நிலுவைத்தொகையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஆவின் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் வினியோகிக்கும் பாலுக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் மூலம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. தரமான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் 35 ஆயிரம் பணியாளர்கள், 10 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள், பல லட்சம் விவசாயிகள், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆவின் நிர்வாகத்தில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர்
கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 10 நாட்களுக்கு ஒரு முறை பாலுக்கான கட்டணம் வழங்கப்படுகிறது. செலவுகளை குறைக்கும் வகையில், தற்போது மின் கட்டணம் 9.6 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆவினுக்கு மாதத்திற்கு ரூ.42 லட்சம் மிச்சமாகி வருகிறது. ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் விற்பனைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படித்த இளைஞர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஆவின் பொருட்கள் விற்பனையகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் தயாரிக்கும் இனிப்புகளுக்கு கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பால் கொள்முதல்
இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பால் மற்றும் பால் தயாரிப்புகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனம் மூலம், 4 டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை இது 5 டன்னாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன் வரவேற்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிதர்ஷினி, ஆவின் நிறுவன இணை இயக்குனர் லட்சுமணன், கணேஷ் எம்.எல்.ஏ, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஷ்வரி, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.