அறிவித்த திட்டங்கள் அரசு ஆணைகளாகி பயன்பாட்டிற்கு வந்தால்தான் சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|அறிவித்த திட்டங்கள் அரசு ஆணைகளாகி குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால் அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் திட்டங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், களஆய்விற்கு செல்லும்போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருப்பதை சுட்டிக்காட்டி, வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பணிகள் முன்னேற்றம் குறித்து பார்வையிட அமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதேபோன்று பணிகளின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்களையும் வாரந்தோறும் பதிவேற்றம் செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அது எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பதுதான் முக்கியம். எனவே, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்தாலோசித்து உடனுக்குடன் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளை அழைத்துப் பாராட்டுங்கள் என்றும், அறிவித்த திட்டங்கள் அரசு ஆணைகளாகி குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால் அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனையாகும் என்று தெரிவித்து, அந்த சாதனையை நிறைவேற்ற அரசு செயலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
முன்னுரிமைத் திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அத்திட்டங்களின் பயன்களை கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்று துறைச் செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.