போலீசார் தாக்கியதாக கூறி 18 வயது சிறுவன் தற்கொலை முயற்சி - மயிலாடுதுறையில் பரபரப்பு
|விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதாக கூறி 18 வயது சிறுவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தெட்ஷிணாமூர்த்தி என்பவருக்குமிடையே கோயில் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது அசோக்குமாருக்கு ஆதரவாக குருமூர்த்தி மற்றும் இவரது உறவுக்காரரான 18 வயது சிறுவன் ஆகியோர் தகராறை விலக்கி விட முற்பட்டபோது இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக மயிலாடுதுறை போலீசில் தெட்ஷிணாமூர்த்தி தரப்பினர் புகார் தெரிவித்ததை அடுத்து குருமூர்த்தி, சிறுவன் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் மூவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுவனை போலீசார் தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து மனம் உடைந்த சிறுவன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பவம் குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.