< Back
மாநில செய்திகள்
கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தாமதமானால் கடுமையான போராட்டங்களை பா.ம.க முன்னெடுக்கும் என்று அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

திண்டிவனம்

தியாகிகளுக்கு அஞ்சலி

வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு 21 தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் பாலு, மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, வன்னியர் சங்க துணை தலைவர் கருணாநிதி, பேராசிரியர் தீரன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பேராசிரியர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வானூர் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்கொண்டு வர வேண்டும்

வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்குவது தவறாகாது என்றும், தரவுகளை விசாரித்த பிறகு வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. கடந்த 1½ ஆண்டாக தரவுகளை விசாரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விசாரிப்பதற்கு அதிகபட்சம் ஒரு மாதம் தான் ஆகும். முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி தரவுகளை விசாரித்த பிறகு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரவேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வட மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளன. இதற்கு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் வழங்கினால் தான் வளர்ச்சி அடைய முடியும். இந்த புள்ளி விவரத்தை அரசு தான் தெரிவிக்கிறது. இட ஒதுக்கீடு வழங்கவும், தரவுகளை விசாரிக்கவும் ஏன் தாமதமாகிறது என தெரியவில்லை?. மேலும் தாமதமானால் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும். சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க. அதை செயல்படுத்த வேண்டும்.

பயிர்கள் கருகுகின்றன

தமிழகத்தில் டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகுகின்றன. கர்நாடகம் இந்தியாவில் உள்ளதா? இல்லை தனி நாடாக உள்ளதா? என தெரியவில்லை?.

தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை மற்றும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையமோ அல்லது மத்திய அரசோ தனது கட்டுப்பாட்டில் வைத்து நீரை பகிர்ந்து அளிக்கும்படி செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்-மந்திரியை நட்பு ரீதியாக சந்தித்து பேசினால் காவிரிநீர் கிடைக்கும் என நம்புகிறேன்.

திண்டிவனம் பஸ் நிலையம்

திண்டிவனத்தில் கட்டப்படும் புதிய பஸ் நிலையம் ஏரிக்குள் இருப்பதால் அங்கு பஸ் நிலையம் கட்டக்கூடாது என மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தேன். 3 மாதம் கழித்து தற்போது தான் கடிதம் கிடைத்ததாக தகவல் வந்துள்ளது. புதிய பஸ் நிலையம் கட்டும் இடத்தில் வேலையை உடனே நிறுத்த வேண்டும். கலெக்டர் எனக்கு பதில் தரும் வரை பணிகள் நடைபெறக்கூடாது.

இவ்வாறு அவா் கூறினார்.

மேலும் செய்திகள்