
மதுரை
தி.மு.க.வின் நாடகங்களில், கள ஆய்வும் ஒரு நாடகமே -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

தி.மு.க.வின் நாடகங்களில், முதல்-அமைச்சரின் கள ஆய்வும் ஒரு நாடகமே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
தி.மு.க.வின் நாடகங்களில், முதல்-அமைச்சரின் கள ஆய்வும் ஒரு நாடகமே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
திராவிட மாடல்
அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா மதுரை மாநகர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் நேற்று நடந்தது. பகுதி செயலாளர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில் ஈடுபட்டு புரட்சி செய்தவர் ஜெயலலிதா. இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார். அவரது திட்டங்களால் தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருந்தது. அவரது வழியில் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் ஆட்சி நடத்தினார். ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க. ஆட்சி, வெறும் திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு திட்டங்களை எதுவும் நிறைவேற்றவில்லை.
கள ஆய்வு
கள ஆய்வு என்று கூறி முதல்-அமைச்சர் ஒவ்வொரு மண்டலமாக சென்று சூட்டிங் நடத்தி கொண்டு இருக்கிறார். மதுரை உள்பட 5 மாவட்டங்களில் ஆய்வு செய்து கொண்டு இருந்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் ஏற்பட்டு இருக்கிறது. அதிகாரிகளை எல்லாம் அழைத்து முதல்-அமைச்சர் பேசுவது தான் கள ஆய்வா?. இந்த ஆய்வை அவர் சென்னை கோட்டையில் இருந்தே செய்து இருக்கலாம். மதுரையில் இவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் எந்த திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார்கள் என்று கூற முடியுமா?. ஏதாவது திட்டத்தை கொண்டு வந்திருந்தால் தானே கள ஆய்வு செய்ய முடியும். திட்டமே இல்லாமல் கள ஆய்வு எப்படி செய்ய முடியும்?. தி.மு.க.வின் நாடகங்களில் கள ஆய்வு என்பதும் ஒரு நாடகமே. மக்கள் அனைவரும் கொதித்து போய் இருக்கிறார்கள். மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. நாங்களும் உதயநிதி போல செங்கலை தூக்கி காட்டட்டுமா?
விடியல் ஆட்சி
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த ஒரு இடைத்தேர்தல்களை போல ஒரு மோசமான தேர்தலை பார்த்தது இல்லை. தேர்தல் ஆணையம் மிக மோசமாக செயல்பட்டது. அரசு பஸ்களை தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்து இருக்கிறார்கள். விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. மக்களுக்கு விடியல் தராமல் போய் விட்டது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பிளவு என்று சொல்கிறார்கள். பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். கொள்கை வேறு கூட்டணி வேறு. அண்ணா சொன்னது போல் கொள்கை என்பது வேட்டி மாதிரி. கூட்டணி என்பது கழுத்தில் போடப்படும் துண்டு போன்றது. வேட்டியை மாற்றி கொள்ள முடியாது. ஆனால் துண்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.