நாமக்கல்
ஆடி 3-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நன்செய் இடையாற்றில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது
|ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
பலப்பட்டரை மாரியம்மன்
ஆடி மாத 3-வது வெள்ளி, வரலட்சுமி விரதத்தை யொட்டி நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு மஞ்சள் காப்பு சாத்தப்பட்டு, வளையல் மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் ராஜீவ் காந்தி நகரில் உள்ள மங்கள மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா மாரியம்மன்
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி 10 ஆயிரத்து 8 பால்குட அபிஷேகம், 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் கோவில் வளாகம் முன்பு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, பின்னர் பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து குதிரை, பசு ஆகியவைகளுடன் காவிரி ஆற்றில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து மதியம் 12 மணிக்கு மகா மாரியம்மனுக்கு 10 ஆயிரத்து 8 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதில் கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், எட்டுப்பட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ராசிபுரம், குமாரபாளையம்
ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத 3-வது வெள்ளியையொட்டி காலை முதல் இரவு வரை ஏராளமான பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் ராசிபுரம் டவுன், ஈ.பி.காலனியில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், பாரக்கல் புதூர் அத்தனூர் அம்மன் கோவில், புதுப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில், அத்தனூர் அத்தனூர் அம்மன் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து அம்மன் மஞ்சள் கொம்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.