< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வில் இணையும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்... அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வில் இணையும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்... அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
27 Feb 2024 1:05 PM IST

பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள்போல அலைவதாக அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கோவை:

கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவிநாசி சாலையில் நேற்று பா.ஜ.க. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் அவரது கார் நின்றது குறித்தும் அவர் அவ்வழியாகச் சென்றது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அம்மன் அர்ஜுனன் கூறியதாவது:-

அவிநாசி சாலை அனைவருக்கும் பொதுவான சாலைதானே? அவர்கள் அந்நேரத்தில் அங்கே இருப்பார்கள் என்று எனக்கு என்ன தெரியும்? பா.ஜ.க. நிகழ்ச்சி நடந்ததற்கு எதிர்புறம் இருக்கும் வீடு எனது நண்பர் வீடு. எனது நண்பர் வீட்டில் இருந்துதான் வந்தேன்.

பா.ஜ.க.வில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் இன்று அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர். அவர்கள் கொங்கு மண்டலம் அல்லது தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

எங்கள் மடியில் கனமில்லை, அதனால் நாங்கள் பயப்பட தேவையில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள்போல அலைகிறார்கள். நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்?

இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் தனித்து நின்றதாக சரித்திரமில்லை. அ.தி.மு.க.தான் 2016-ல் தனித்து நின்று 37 தொகுதிகளில் வென்றது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்