திண்டுக்கல்
அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்
|திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவில் அம்மன் அனந்தசயன கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது. இ்தையடுத்து நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி கோவிலில் அம்மனின் கருவறைக்கு முன்பு தெப்பம் அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் தாமரை, மல்லிகை, முல்லை, ரோஜா மலர்கள் மிதக்க கோட்டை மாரியம்மன் அனந்த சயன கோலத்தில் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். கோட்டை மாரியம்மனின் தெப்பத்திருவிழாவுடன் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றது.