அம்மா உணவகங்கள் நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|அம்மா உணவகங்கள் நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தேவைகளை அறிந்து, தமிழக மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து, அதற்கேற்ப பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. விலைவாசி உயர்வு என்னும் கொடூர தாக்குதலில் இருந்து தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, உழைக்கும் மக்களை, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை காப்பதற்காக, மலிவு விலையில் தரமான உணவை வழங்க திட்டமிட்டார். அதன்படி, நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் அம்மா உணவகங்களை உருவாக்கினார். சென்னையில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியில் இருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தி தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அம்மா உணவகங்களின் செயல்பாட்டை நீர்த்துப்போகச் செய்த பெருமை தி.மு.க.வையே சாரும்.
ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.