< Back
மாநில செய்திகள்
அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள்

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள் உள்ளன.


தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையிலும் அதன்பிறகு தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஏழைகளின் அட்சய பாத்திரமாக செயல்பட்டதால் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அரசு பொது மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உணவு வாங்க வெளியே செல்ல வேண்டாம், அதிகம் செலவழிக்கவும் வேண்டாம் என்ற நிலையை இத்திட்டம் ஏற்படுத்தியது.

கொரோனா காலத்திலும் சேவை

இந்த அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி ரூ.1-க்கும், மதிய உணவாக சாம்பார், தயிர் சாதம் தலா ரூ.5-க்கும் வழங்கப்படுகிறது. காலை உணவு 7 மணி முதல் 10 மணி வரையும், மதிய உணவு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையும் வழங்கப்படுகிறது.

நகரின் உட்புறப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த அம்மா உணவகம், கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையின்றி இயங்கியதன் மூலம் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருடைய பசியையும் போக்கியதை யாராலும் எளிதில் மறக்கவும், மறுக்கவும் முடியாது.

மூடப்பட உள்ளதா?

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்த உடனேயே சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, சூறையாடப்பட்ட அம்மா உணவகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தார். சில இடங்களில் போர்டுகள் அகற்றப்பட்டன. அதோடு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் இனி கலைஞர் உணவகமாக பெயர் மாறும் எனவும், அம்மா உணவகத்திற்கு மூடு விழா நடத்தப்படும் எனவும் பல்வேறு விதமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதை மெய்ப்பிக்கும் வகையில் அம்மா உணவகங்கள் பல்வேறு பிரச்சினைகளை சுமந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன.

மக்கள் வருகை குறைவு

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகிலும், திண்டிவனத்தில் செஞ்சி சாலை பஸ் நிறுத்தம் அருகிலும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் அருகிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகத்தில் தலா 10 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அம்மா உணவகம் மட்டும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. திண்டிவனத்தில் உள்ள அம்மா உணவகம் பஸ் நிலையம் அருகில் செயல்படுவதால் அங்கு முன்பு இருந்ததைப்போன்று மக்கள் வருகை இல்லாவிட்டாலும் எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் இங்கு வருவதாக அம்மா உணவக பணியாளர்கள் கூறுகின்றனர்.

உணவு சுவையாக இல்லை

விழுப்புரத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டபோது ஒரு நாளைக்கு காலை உணவுக்கு 500 பேரும், மதிய உணவுக்கு 300 பேரும் வந்து சாப்பிட்டனர். தற்போது காலை உணவுக்கு 150 பேரும், மதிய உணவுக்கு 100 பேரும் வருகிறார்கள். இதற்கு காரணம் உணவு வகைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும், தரமான, சுவையான உணவு வழங்குவதில்லை எனவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இந்த உணவகங்களில் சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை சீரான அளவில் சரிவை கண்டபோதிலும் உணவகங்களில் முன்பு இருந்ததைப்போன்றே தற்போதும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படாமல் முன்பு வழங்கப்பட்டதைப்போன்றே தற்போதும் ஊதியம் வழங்கப்படுகிறது.

மேம்படுத்த கோரிக்கை

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்திற்கு மூடுவிழா நடத்த மறைமுகமாக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும், முறையாக பராமரிப்பு செய்து நடத்தாமலும் மெத்தனப்போக்குடன் ஆட்சியாளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.

இவர்களின் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் ஏழை, எளிய மக்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்கள் அழியாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும், அம்மா உணவகங்களை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

பொருட்களின் தரம்

அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களின் தரம் நன்றாக இருந்தாலும் மளிகை பொருட்கள், காய்கறிகளை குறைவாக கொடுக்கிறார்கள். மாத செலவினத்தில் 45 சதவீதம் வருவாய் கிடைத்தால்தான் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளதால் எங்களுக்கு இதுநாள் வரையிலும் ஊதியமும் உயர்த்தப்படவில்லை. இருப்பினும் ஏழை மக்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காக சேவை மனப்பான்மையுடன் இங்கு பணியாற்றி வருகிறோம்.

அம்மா உணவகத்தை தற்போதுள்ள அரசு மூடிவிடும் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதற்கு மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை மற்றும் வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்குவதே காரணம் எனக்கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வருகை குறைவு மற்றும் வருவாய் இல்லை எனக்கூறி தயவு செய்து தமிழக அரசு, அம்மா உணவகத்தை மூடிவிட வேண்டாம். அம்மா உணவகத்தை நம்பி ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எனவே சேவை நோக்கத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், தொடர்ந்து அந்த சேவை நோக்கத்துடனே இயங்க வேண்டும்.

அதேநேரத்தில் இந்த அம்மா உணவகத்தின் மூலம் வருவாயை சற்று அதிகரிக்கவும் எங்களிடம் திட்டம் உள்ளது. இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஒரே மாதிரியான உணவு வகைகளே வழங்கப்படுவதால் அதே இட்லி, அதே சாம்பார் சாதம் என பலருக்கும் சளிப்பு வந்திருக்கும். இதனால் தனியார் உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளைப்போல் காலையில் கிச்சடி, பூரி, பொங்கல், மதியம் ரசம், காரக்குழம்பு, அப்பளத்துடன் அளவு சாப்பாடு ரூ.20 ரூபாய்க்கு வழங்கினால் வருவாய் சற்று அதிகரிக்கும். அப்படி செய்தால் இந்த அரசுக்கும் நற்பெயர் கிடைக்கும்.

இவ்வாறு ஊழியர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்