சென்னை
அம்மா உணவகத்தின் சப்பாத்தி தயாரிக்கும் நவீன எந்திரம் திருட்டு
|புளியந்தோப்பு,
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு அருகே துணை மின் நிலைய கட்டிடம் உள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி அம்மா உணவகத்துக்கு சொந்தமான சப்பாத்தி செய்ய பயன்படும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. தற்போது பயன்பாட்டு இல்லாததால் அந்த எந்திரம் அங்கு வைக்கப்பட்டு அறை பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த 4-ந்் தேதி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்ட போது அந்த எந்திரம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து 73-வது வார்டு உதவி பொறியாளர் ஜெரால்டு கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் அந்த கட்டிடத்தின் ஒரு பக்க சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து அந்த எந்திரத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.