"சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது" - மேயர் பிரியா தகவல்
|சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் 2வது நாளாக மேயர் பிரியா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அந்த கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் சென்னையில் அம்மா உணவகம் ரூ. 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நாளொன்றுக்கு ரூ. 500க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறினார்.
அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசியதாவது:-
ஏரியா சபை கூட்டத்தை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம், கட்டிடங்களில் நடத்தலாம். டீ, பிஸ்கட், காபி போன்ற செலவினங்களை மாநகராட்சி ஏற்கும். அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும்.
அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா அது போலவே செயல்படும். ஊழியர்கள் தேவைப்பட்டால் அந்த பகுதி கவுன்சிலர்களே நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.