< Back
மாநில செய்திகள்
அமெரிக்க என்ஜினீயர்கள் ஆட்டோவில் தமிழக சுற்றுப்பயணம்
மாநில செய்திகள்

அமெரிக்க என்ஜினீயர்கள் ஆட்டோவில் தமிழக சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
30 Dec 2022 8:10 AM IST

அமெரிக்க என்ஜினீயர்கள் ஆட்டோவில் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

சென்னை,

என்ஜினீயர்கள்

அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் நகரை சேர்ந்தவர்கள் பிரைஸ் (வயது 30), டைலர் (26). சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் வாஷிங்டன் நகரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆண்டு தோறும் அவர்கள் வேலை செய்யும் சாப்ட்வேர் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை வழங்குகிறது.

இந்த விடுமுறை நாட்களில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் புத்தாண்டு விடுமுறை தினத்தை கழிக்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவார்கள்.

இந்த நிலையில் வாஷிங்டன் நகர சகோதரர்கள் பிரைஸ், டைலர் இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை தினத்தை தமிழகத்தில் கழிக்க முடிவு செய்து சென்னை வந்தனர். பின்னர் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆட்டோ மூலம் சென்று சுற்றிபார்க்கவும், புத்தாண்டை மதுரையில் கொண்டாட முடிவு செய்தனர்.

மாமல்லபுரம் வந்தனர்

அமெரிக்க சகோதரர்கள் சென்னையில் ஒரு வாடகை ஆட்டோ எடுத்து மாமல்லபுரம் வந்தனர். தம்பி டைலர் ஆட்டோ ஓட்ட அண்ணன் பிரைஸ் ஆட்டோ பின் சீட்டில் அமர கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரம்மியமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

முன்னதாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஆட்டோவில் மாமல்லபுரம் வந்த அவர்களை சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் வரவேற்று, மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் சுற்றி காட்டினார்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை முழுவதும் சுற்றி பார்த்து மகிழ்ந்த அமெரிக்க சகோதரர்கள் பிறகு தங்கள் பயணத்தை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். புதுச்சேரி பயணத்தை முடித்து விட்டு வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், பிச்சாவரம், ஊட்டி, கொடைக்கானல், பூம்புகார், ஏற்காடு, கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, குற்றாலம், ஏலகிரி, கொள்ளிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

மேலும் ஆட்டோவில் பயணிக்கும் அண்ணன்-தம்பிகளாள நாங்களே மாறி, மாறி ஆட்டோவை ஓட்டி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அப்போது இயற்கை எழில்மிகுந்த காட்சிகளை பார்ப்பதற்கு வசதியாக உள்ளதாகவும், அமெரிக்காவில் உயர்தர உணவுகளை சாப்பிட்டு அலுத்துவிட்ட தங்களுக்கு, இங்கு கிராமப்புறங்களில் சாலையோர உணவகங்களில் உணவருந்தி செல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாத்தை தூங்கா நகரம் மதுரையில் கொண்டாட உள்ளதாகவும், ஆட்டோ பயணம் மூலம் தமிழகத்தின் சுற்றுலா தலங்களையும், கோவில்களையும் பார்த்து ரசித்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அமெரிக்க சகோதரர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்