< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

ஆம்பூர்: தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது; மத்திய உளவுத்துறை அதிரடி

தினத்தந்தி
|
31 July 2022 6:37 AM IST

ஆம்பூரில் அதிகாலையில் வீட்டை சுற்றிவளைத்த உளவுத்துறை போலீசார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்:

ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான மீர் அனாஸ் அலிக்கு (வயது 22) வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, அவரது வீட்டை மத்திய உளவுத்துறை போலீசார் சுற்றிவளைத்து தூங்கிக்கொண்டிருந்தவரை பிடித்துச்சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உரையாடல்களை டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து செல்போன்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அன்சார் அடிக்கடி பேசியது தெரியவந்தது. உடனடியாக இது பற்றி சென்னையில் உள்ள உளவுத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து உளவுத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு, வேலூர், திருப்பத்தூர், திருச்சி நகரங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உளவுத்துறை போலீசார் என 16-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்பூருக்கு வந்தனர்.

அவர்கள் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் அன்சார் அலியை பிடித்தனர்.

அவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆற்காடு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்களில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தனர். இதில் அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம்ஆதரவு தெரிவித்து பதிலுக்கு இவரும் பதிவு செய்ததாக தெரிகிறது.

அவரிடம் சுமார் 12 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இதனால் இவர் இன்று கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் ஆம்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்