சென்னை
பிரிந்து வாழும் மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது - வன்கொடுமை சட்டத்தில் சிறை
|பிரிந்து வாழும் மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்து வன்கொடுமை சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லவன் சாலை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா (வயது 36). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து வாழ்கிறார். தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். குணசீலன் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்தார். கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது.
நேற்று முன்தினம் சுரேகா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குணசீலன், சுரேகாவிடம் தகராறு செய்தார். திடீரென்று கட்டை மற்றும் பீர்பாட்டிலால் சுரேகாவை தாக்கிய குணசீலன் பொதுமக்கள் திரண்டு வரவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தாக்குதலில் காயம் அடைந்த சுரேகா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசீலனை கைது செய்தார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.