< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலியின் கையை உடைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
மாநில செய்திகள்

கள்ளக்காதலியின் கையை உடைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

தினத்தந்தி
|
28 Feb 2024 1:58 AM IST

கை குழந்தையுடன் நியாயம் கேட்க வந்தபோது சிராஜ் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது என்கிற சிராஜ் (வயது 52). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதுடைய பெண்ணின் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சிராஜ் தனது ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கும், சிராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். அதன்பின்னர் சிராஜ் அந்த பெண்ணுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றார். பின்னர் அந்த பெண்ணை சிராஜ் சந்திக்க போகாமல் நிறுத்திவிட்டார்.

இதையடுத்து அந்த பெண் நேற்று சிராஜை சந்தித்து நியாயம் கேட்க கை குழந்தையுடன் தாராபுரம் வந்தார். அதில் ஆத்திரம் அடைந்த சிராஜ் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு கை உடைந்தது. அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்