சென்னை
பஞ்சராகி நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - ஒருவர் பலி
|கோவூர் அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன்( வயது 75). இவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவருடன் மனைவி ஜெபமாலை(65), மருமகன் சந்திரசேகர்(35), ஆகியோர் உடன் வந்தனர். ஆம்புலன்சை ராஜா(24) என்பவர் ஓட்டி வந்தார். தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்த போது கோவூர் அருகே சாலையின் ஓரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.