< Back
மாநில செய்திகள்
உடன்குடியில் போலீசார் சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது
மாநில செய்திகள்

உடன்குடியில் போலீசார் சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது

தினத்தந்தி
|
16 April 2023 4:00 AM IST

உடன்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் ரோந்து

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் போலீசார் நேற்று உடன்குடி வாரச்சந்தை பகுதியில் ரோந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

ஆம்பர்கிரீஸ் சிக்கியது

அதில் அவர் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சிவமுருகன் மகன் குமரன் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர், வாசனை திரவியம் மற்றும் நறுமணப்பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர்கிரீசை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குமரனையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆம்பர்கிரீசையும் திருச்செந்தூர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ரூ.2½ கோடி

திருசெந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு, குமரனை கைது செய்தார். அவரிடம் இருந்து 2.560 கிலோ எடை கொண்ட ஆம்பர்கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் 16 கிலோ எடை கொண்ட ஆம்பர்கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 3-வது முறையாக ஆம்பர்கிரீஸ் போலீசார் சோதனையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்