< Back
மாநில செய்திகள்
காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் பரபரப்பு
மாநில செய்திகள்

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
6 Dec 2022 1:06 PM IST

கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை வீட்டுக்காவலில் போலீசார் வைத்துள்ளனர்.

கும்பகோணம்:

அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்தையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை வீட்டுக்காவலில் போலீசார் வைத்துள்ளனர்.

இதுகுறித்து டி. குருமூர்த்தி கூறும்போது, "அம்பேத்கர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு சமூகத்தின் கீழ் கொண்டு வருவது ஏற்புடையதாக இல்லை. அவர் பவுத்த சமயத்தை தழுவி இருந்தார். அந்த மதம், இந்து மதத்தை சார்ந்ததாகும். அந்த பவுத்த மதத்தின் நிறமும் காவி ஆகும்.

அவரை ஒரு சமூகத்தினர் சாதிய ரீதியாக கொண்டு சொல்வதை தடுக்கும் வகையிலும், அம்பேத்கர் இந்து மதத்தை சார்ந்த பவுத்த மதத்தை சேர்ந்தவர் என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதேபோன்று அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப்படும்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்