செங்கல்பட்டு
இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரம் வருகை
|இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்.
மாமல்லபுரம் வந்தார்
இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் எலிஸ்கா ஜிகோவா மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் வந்திருந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி யுவராஜ் என்பவர் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஆங்கில மொழியில் விரிவாக விளக்கி கூறினார்.
பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தையும், அங்குள்ள அழகிய சிற்பங்களையும் கலை நயத்துடன் ரசித்து பார்த்தார்.
வரலாற்று கையேடு
பிறகு கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதங்கள் உள்ளிட்ட புராதன சின்னங்கள் கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற அரிய தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். மேலும் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய சுற்றுலாத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட வரலாற்று கையேட்டை சுற்றுலா அலுவலர் சக்திவேல் செக் குடியரசின் தூதரிடம் வழங்கினார். அவரிடம் ஆர்வமாக அந்த கையேட்டினை வாங்கிய அவர் அதில் உள்ள தகவல்கள் பற்றி படித்து தெரிந்து கொண்டார்.
இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.