அமேசான் நிறுவன குடோனில் துளையிட்டு பொருட்கள் கொள்ளை - ஊழியர்கள் அதிர்ச்சி
|அமேசான் நிறுவன குடோனில் மர்மநபர்கள் துளையிட்டு பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் ஆன்லைன் குடோன் உள்ளது. இதில் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த குடோன் அருகிலேயே ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. அந்த பகுதியில் இருந்து நேற்று இரவு மர்ம நபர்கள் குடோனின் சுவற்றை கடப்பாரை கம்பியால் துளையிட்டுள்ளனர். கடைக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர்.
இன்று காலை குடோனுக்கு வந்த ஊழியர்கள் அங்கு சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அங்கு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. குடோனில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.