< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்

தென்காசி ஸ்பெக்ட்ரம் பள்ளியில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்தபோது எடுத்த படம்.

தென்காசி
மாநில செய்திகள்

பள்ளிகளில் யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
22 Jun 2023 6:45 PM GMT

தென்காசி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிக்கூடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பாரத் மாண்டிசோரி பள்ளி

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பாலசுந்தர் தலைமை தாங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் முன்னிலை வகித்தார். தேவேஸ், காளிபிரியா ஆகியோர் யோகாவின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவத்தும் குறித்து உரையாற்றினர்.

உடற்கல்வி ஆசிரியை சுடலைவடிவு மற்றும் மழலையர் வகுப்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் குழுவாக சேர்ந்து யோகாசன பயிற்சியை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை பாரத் கல்விக்குழும தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா, முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர். ஆஹிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

டிரஷர் ஐலண்ட் பள்ளி

செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியாளர் மாதவி மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மூச்சுப்பயிற்சி, பத்மாசனம், சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், சசங்காசனம், தனுராசனம், தடாசனம், சக்கராசனம், யோகமுத்திரா, புஜங்காசனம் போன்ற ஆசனங்களை செய்து அசத்தினர். யோகா பயிற்சி செய்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் யோகா செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்சலா செய்திருந்தார்.

செந்திலாண்டவர் பாலிடெக்னிக்

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. வேதியியல் பேராசிரியை சகிலா தேவி வரவேற்று பேசினார். கல்லூரியின் தலைவர் எம்.புதிய பாஸ்கர் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் கல்யாணி, கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜன், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி கருப்பசாமி ஆகியோர் யோகா தினம் குறித்து பேசினர். நிர்வாக அதிகாரி மணிகண்டன், பேராசிரியர் ஜார்ஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக யோகா பயிற்சியாளர் லதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாவின் பயன்கள் குறித்து எடுத்துக்கூறி யோகா பயிற்சி அளித்தார். முடிவில் பேராசிரியை அனுசியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர்கள் கருப்பசாமி, சுடர், சுபா ஆகியோர் செய்திருந்தனர்.

ஸ்பெக்ட்ரம் பள்ளி

தென்காசி ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு, சூரிய நமஸ்காரம் செய்முறை பயிற்சி ஆகியவை நடைபெற்றன.

பள்ளியின் இணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஹெனோ சீதா முன்னிலை வகித்தார். டாக்டர் ஜெய பாலாஜி, சிவ கவி நந்தினி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர். இதில் சுமார் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்