திருப்பூர்
அமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயலால் உயிரிழக்கும் அபாயம்
|உடுமலை அமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
உடுமலை அமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி அணை
இயற்கை எழில் சூழ்ந்த மனதை கொள்ளை கொள்ளும் அழகில் திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு மலைக் குன்றுகளை இணைத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அணைக்கு முன்பு பூங்கா, ராக்கார்டன், உள்ளிட்டவையும் படகு சவாரியும் இயக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கல்லாபுரம் செல்லும் சாலையில் வனத்துறையினர் பராமரித்து வரும் முதலைப்பண்ணையும் உள்ளது. இங்குள்ள இயற்கை அம்சங்களை பார்வையிடவும், புகைப்படம் எடுத்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதி அணைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதில் குடும்பத்தோடு வருகின்ற சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிட்ட பின்பு அணையில் படகு சவாரி செய்து மகிழ்வதுடன் முதலைப் பண்ணையில் உள்ள முதலைகளை பார்த்துவிட்டு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.
அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
ஆனால் பொழுதுபோக்குக்காக வருகின்ற கல்லூரி மாணவர்கள் ஆர்வ மிகுதியில் அணைப்பகுதியில் அத்துமீறி இறங்கி தண்ணீரில் நீச்சல் அடிப்பது, ஓடி பிடித்து விளையாடுவது உள்ளிட்ட அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ள சூழலில் ஆங்காங்கே சேரும் சகதியுமாக உள்ளது.
மேலும் முதலைகள் நடமாட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைக்குறிக்கும் விதமாக அணையின் முகப்பு பகுதியில் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை பதாகையும் வைத்து உள்ளனர்.
உயிரிழப்பு அபாயம்
அதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. எச்சரிக்கையை மீறி ஆபத்தான முறையில் அணைக்குள் அத்துமீறி வருகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் போலீசார் அணைப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் அணைக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்க முன்வர வேண்டும். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.