< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற முன்னாள் மாணவர்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற முன்னாள் மாணவர்கள்

தினத்தந்தி
|
7 Sept 2022 12:23 AM IST

சிங்கம்புணரியில் ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசி பெற்றனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளியாக அன்றைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறக்கப்பட்டது. பல சிறந்த மாணவர்களை உருவாக்கி 63 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற 110 ஆசிரியர்களை வரவழைத்து கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்துரை, முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்றார்.

மாவட்ட சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரிபுரசுந்தரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.இச்சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், ஆர்.ஜி. கோல்டன் பேலஸ் நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன், ஆர்.எம்.எஸ் புசலியம்மாள், பொது மருத்துவர் அருள்மணி நாகராஜன், கே.ஆர்.ஏ.கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தென்றல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலாநிதி சக்திவேல், ஆசிரியர்கள், மாணவிகள், முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்