1922-ல் தொடங்கப்பட்ட பள்ளியை மூடுவிழாவில் இருந்து மீட்டு புத்துயிர் அளித்த முன்னாள் மாணவர்கள்
|2018-ல் வெறும் 17 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 170 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், கடந்த 2018-ம் ஆண்டு பள்ளியை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இதை அறிந்த முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஒன்றை துவக்கி, சுமார் 20 லட்ச ரூபாய் நிதி திரட்டி பள்ளியை சீரமைத்து பள்ளியில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.
மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல புதிய வேன் ஒன்றையும் வாங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் 2018-ல் வெறும் 17 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 170 ஆக அதிகரித்துள்ளது. தங்கள் பள்ளியை மூடுவிழாவில் இருந்து மீட்டு புத்துயிர் அளித்த முன்னாள் மாணவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.