கள்ளக்குறிச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
|திருக்கோவிலூர் அரசு கபிலர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
பின்னர் அவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் 12 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கி கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க செயலாளர் கோபிகிருஷ்ணன், அவைத்தலைவர் குணா, அ.தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் இளவரசன், திருவண்ணாமலை சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் நகர வணிகர் பேரமைப்பு தலைவர் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். இதில் நகராட்சி கவுன்சிலர் கோவிந்தராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகர செயலாளர் பஷீர், ஐசக், வக்கீல்குமாஸ்தா வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் தொ.மு.ச. சண்முகம் நன்றி கூறினார்.