< Back
மாநில செய்திகள்
வரலாற்று ஆவணம், பொக்கிஷம் என பல பெயர் எடுத்தாலும்கைப்பேசியின் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?பொதுமக்கள் கருத்து
தேனி
மாநில செய்திகள்

வரலாற்று ஆவணம், பொக்கிஷம் என பல பெயர் எடுத்தாலும்கைப்பேசியின் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
3 Jan 2023 12:15 AM IST

கைப்பேசி ஆதிக்கத்தால் காணாமல் போகிறதாக டைரி என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

உலகில் தொழில்நுட்பங்கள் பல்வேறு வளர்ச்சியை கண்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்தை கையில் தூக்கும் நாம், நம்மிடம் இருந்த ஏதோ ஒன்றை தொலைத்து விடுகிறோம். அப்படி நம்மிடம் இருந்து மறைந்து போன, நாம் மறந்து போன பழக்க வழக்கங்கள் ஏராளம்.

டைரி எழுதும் பழக்கம்

அந்த வகையில், டைரி எழுதும் பழக்கமும் கைப்பேசியின் (செல்போன்) ஆதிக்கத்தால் காணாமல் போகிறது. டைரி எழுதுவது என்பது மனதுக்கு நெருக்கமான விஷயம். டைரி என்பதே பொக்கிஷம் தான். பல நிகழ்வுகளை பதிவு செய்த டைரிகள் இன்றைக்கும் பலரின் வீடுகளுக்குள் பொக்கிஷங்களாக மறைந்து இருக்கும்.

டைரி (நாட்குறிப்பு) என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளை பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளை குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஒரு ஏடு ஆகும்.

'டைஸ்' என்ற லத்தீன் சொல்லுக்கு நாள் என்று பொருள். அந்த சொல்லில் இருந்து 'டைரியம்' என்ற லத்தீன் சொல் உருவானது. 'டைரியம்' என்ற சொல்லுக்கு 'நாட்குறிப்பு' என்று பொருள். அதில் இருந்தே 'டைரி' என்ற ஆங்கிலச் சொல் உருவானது.

வாழ்வில் அன்றாடம் நிகழும் நினைவுகளை எழுதி பத்திரப்படுத்துவதற்காக மனிதன் கண்டுபிடித்த மிகச்சிறந்த பழக்கம் டைரி எழுதும் முறை. ஒவ்வொரு நாளும் செய்த சிறந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள், பசுமையான நினைவுகள், கசப்பான அனுபவங்கள், இனிமையான நட்பு, காதல், துரோகம், சிக்கலான நேரங்களில் எடுத்த முடிவுகள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கும் டைரியை, ஒரு வாழ்க்கை சரித்திர ஏடு என்றும் சொல்லலாம்.

வரலாற்று ஆவணம்

17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்பிறகு மேலைநாடுகளில் டைரி எழுதும் பழக்கம் உருவாகத் தொடங்கியது. சென்னை பெரம்பலூரில் 1709-ம் ஆண்டு பிறந்த அனந்தரங்கம் பிள்ளை புதுச்சேரியில் குடியேறி அரசு பணியில் சேர்ந்து திவானாக பதவி உயர்வு பெற்றார். அவரிடம் அன்றாட நிகழ்வுகளை எழுதி வைக்கும் பழக்கம் இருந்தது. அவர் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1736-ம் ஆண்டு முதல் 1761-ம் ஆண்டு வரை 25 ஆண்டு காலம் அவர் டைரி எழுதினார். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று கருவூலமாகவும், ஆவணமாகவும் அவருடைய நாட்குறிப்பு உதவின. 18-ம் நூற்றாண்டின் வரலாற்றை அறிய அவருடைய டைரி துணை நிற்கின்றன. டைரியில் இப்படி தான் எழுத வேண்டும் என்ற எந்த வரையறையும் கிடையாது. சிலரின் டைரி காதலால் நிரம்பி இருக்கும். சிலரின் டைரி அன்றாடம் சந்தித்த வலிகளால் நிரம்பி இருக்கும். சிலர் பயணங்களையும், அனுபவங்களையும் பத்திரப்படுத்துவர். இப்படி ஒவ்வொருவரின் டைரியிலும் பல ரகசியங்கள்அடங்கி இருக்கும்.

டைரி விற்பனை மந்தம்

சாப்பாட்டு டைரி, அலுவலக டைரி, சம்பள டைரி, மருத்துவ டைரி, நடிகர், நடிகைகளின் கால்ஷீட் டைரி, தன்னிலை விளக்க டைரி, வீட்டு வரவு-செலவு டைரி, பள்ளி டைரி என பலவகையான டைரிகள் உள்ளன. அதில், தன்னிலை விளக்க டைரி முக்கியத்துவம் பெற்றது. அதில் தான் அன்றாட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது.

டைரி எழுதும் பழக்கம் பணக்காரர்களுக்கும், பிரபலமானவர்களுக்கும் மட்டும் தான் இருக்கும் என்பது இல்லை. சாமானிய மக்களிடமும் அந்த பழக்கம் உண்டு. டைரி எழுதும் பழக்கம் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது என்று சொல்வார்கள். டைரி எழுதும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம் குறையும் என்று அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட நிகழ்வுகளை எழுதுவது என்பது, வருங்காலத்தில் அதை அசைபோட்டு பார்க்க உதவும். வரும்கால சந்ததிக்கு அது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை டைரி எழுதும் பழக்கம் தோய்ந்து போய்விட்டது. முன்பெல்லாம் புத்தாண்டு பிறக்கிறது என்றால் டைரி விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதும். நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் புத்தாண்டின்போது வாழ்த்து அட்டைகளோடு, டைரியையும் பரிசளித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால், இன்றைக்கு கடைகளில் டைரிகள் தேக்கம் அடைந்துள்ளன. விற்பனை மந்தமாகி உள்ளது. வாழ்த்துகளை கூட வாட்ஸ்-அப்-ல் அனுப்பி விட்டு கடந்து போகின்றனர். பிறருக்காக மட்டும் இல்லாமல் தங்களின் தேவைக்கு கூட டைரி வாங்குபவர்கள் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.

தொழில்நுட்பங்கள்

இன்றைக்கு 'பேஸ்-புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களே பலருக்கும் டைரியாக இருக்கிறது. அன்றாடம் நிகழ்வுகள் முதல், என்ன சாப்பிட்டார்கள்? யாருடன் சாப்பிட்டார்கள்? யாருடன் சண்டை போட்டார்கள்? அன்பையும், வெறுப்பையும் யார் மீதெல்லாம் காட்டுகிறார்கள்? என்பதை சமூக வலைத்தளங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவற்றின் கருவியாக இருப்பது கையடக்க செல்போன் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு செல்போனும் கையுமாக திரிகிறார்கள்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கின்றனர். சமூக வலைத்தளங்களிலோ அல்லது சில செயலிகளை பதிவிறக்கம் செய்தோ அதில் நிகழ்வுகளை பதிவு செய்கின்றனர். தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் கைகொடுத்து விடாது. சமூக வலைத்தள கணக்கு திடீரென முடங்கிப் போனாலோ, செல்போனில் பதிவிட்ட தகவல்கள் அழிந்து போனாலோ அத்தனையும் பாழாகிவிடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய டைரியும் வீட்டின் ஒரு ஓரத்தில் பத்திரமாய் கிடக்கும். ஒவ்வொரு முறை திறக்கும் போதும், பழைய நினைவுகளை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும்.

இன்றைக்கு டைரி எழுதும் பழக்கம் எந்த அளவில் உள்ளது என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ரகசியங்கள் காக்கும் இடம்

சுரேஷ்குமார் (வக்கீல், தேனி) :- கல்லூரி காலங்களில் எனக்கு டைரி எழுதும் பழக்கம் உருவானது. சட்டப்படிப்பு படித்து வக்கீலாக பணி செய்யத் தொடங்கியதும் கோர்ட்டு நடப்புகளை டைரியில் எழுதி வந்தேன். செல்போன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால் தற்போது டைரி எழுதும் பழக்கம் குறைந்துவிட்டது. வழக்கு விவரங்கள், வாய்தா விவரங்களையும் செல்போனில் பார்த்துக் கொள்ள முடிகிறது. செல்போன் சார்ஜ் இல்லாமல் அணைந்து போய்விட்டால் விவரங்களை தேட முடியாது. இதனால் முக்கிய வழக்கு விவரங்கள், வாய்தா விவரங்களை டைரியில் குறித்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. டைரி எழுதுவது நல்ல பழக்கம். செல்போனை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கவும் முடியாது.

எழுத்தாளரும், ஆசிரியருமான சிவாஜி (சுருளிப்பட்டி):- எனக்கு 20 வயதில் டைரி எழுதும் பழக்கம் ஏற்பட்டது. செல்போன் பயன்பாட்டுக்கு முன்பு வரை டைரி எழுதுவது அதிகம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அந்த பழக்கம் குறைந்து விட்டது. செல்போனில் 3 மாதங்களுக்கு முன்பு என்ன எழுதினோம் என்பதை திருப்பிப் பார்ப்பது சிரமம். ஆனால், டைரியில் 2000-ல் என்ன எழுதினோம், 2020-ல் என்ன எழுதினோம் என்பதை உடனே தேடிப் பிடிக்க முடியும். டைரி என்பது ஒரு வரலாறு. செல்போன் என்பது ஈசல் போன்றது. வாழ்க்கை துணை போன்றது தான் டைரி. மின்மினி போன்றது தான் செல்போன். அறிவியல் என்னதான் வளர்ந்து இருந்தாலும், மனைவியிடமோ, நண்பர்களிடமோ பேச முடியாதவற்றை கூட டைரியில் எழுத முடியும். ரகசியங்கள் காக்கப்படும் இடம் டைரி. தற்போது டைரி எழுதும் பழக்கம் அரிதாகிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்