அக்கா, தம்பியுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி...பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
|தச்சுத்தொழிலாளியான செந்தில்பிரபு வந்தவாசியில் வேலை செய்தபோது கவிதா என்ற பெண்ணை காதலித்து 2-ம் திருமணம் செய்து கொண்டார்.
வந்தவாசி,
வந்தவாசியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தொழிலாளியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மர்மச்சாவு என்று நாடகம் ஆடிய மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பிரபு (வயது 42), தச்சுத்தொழிலாளி. கடந்த 2009-ம் ஆண்டு வந்தவாசியில் வேலை செய்தபோது தேனருவிநகர் பகுதியில் வசித்து வந்த கவிதாவை (29) காதலித்து 2-ம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷ்வேஷ்பிரபு (13) என்ற மகனும், நவநீதி (8) என்ற மகளும் உள்ளனர்.
செந்தில்பிரபு தினமும் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுபோன்று கடந்த 2-ந் தேதி இரவும் அவர் குடிபோதையில் கவிதாவிடம் சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கவிதா (29), அவரின் தாய் காசியம்மாள் (52), தம்பி சந்தோஷ் (25), அக்கா சாந்தி (32) ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில் பிரபுவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட 4 பேரும் செந்தில் பிரபுவை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அருகே உள்ள அக்கா சாந்தி வீட்டிற்கு தூங்க சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை கவிதா கணவர் திடீரென மர்மமான முறையில் இறந்து விட்டதாக கதறி அழுதபடி அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறி உள்ளார்.
தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று செந்தில்பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் கொலை செய்தது தெரிந்து விடும் என்று நினைத்த கவிதா வந்தவாசி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் தினமும் கணவர் தகராறு செய்ததால் தாய், அக்கா, தம்பி ஆகியோருடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அதனை மறைக்க கணவர் மர்மச்சாவு என்று நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து கவிதா, காசி, சந்தோஷ், சாந்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.