சிவகங்கை
கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாய் இருக்கிறதா?
|கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாய் இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி,
கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாய் இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அன்னதான திட்டம்
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். போதும் என்ற மனப்பான்மையை அளிப்பதும் அன்னதானம் மட்டுமே. உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதை நாம் அனுபவ பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவளிப்பது நமது கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சமாக 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2021-2022-ம் ஆண்டு சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. மேலும், தற்போது ராமேசுவரம் ராமநாதசாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பயனுள்ள திட்டம்
இந்த அன்னதான திட்டம் குறித்து பக்தர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
மகேஸ்வரி (பயனாளி):- தினந்தோறும் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிட்டு வருகிறேன். இங்கு கூட்டு, சாம்பார், ரசம், மோர் ஆகியவற்றுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள்தோறும் 100 பேர் வரை இங்கு சாப்பிட்டு வருகிறோம். இதுதவிர அன்றாட பிழைப்பு நடத்துபவர்கள், நாடோடி மக்களும் இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாறி வருகின்றனர். இது மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
சோலையமம்மாள் (காரைக்குடி):- தினந்தோறும் கோவிலில் நடைபெறும் இந்த அன்னதானத்தில் வந்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு 60 வயதிற்கு மேல் ஆகிறது. என்னை போல் வயதானவர்கள், ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாப்பாடு நல்ல முறையில் சிறந்த தரத்துடன் வழங்கி வருகின்றனர். இதுதவிர சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்குகின்றனர்.
இந்த அன்னதான திட்டத்தில் பணியாற்றி வரும் மகேஸ்வரி மற்றும் தமிழரசி ஆகியோர் கூறியதாவது:- இங்கு தினந்தோறும் 100 பேர் அன்னதான திட்டத்தில் சாப்பிட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு சமையலர் மற்றும் உதவியாளர் என நாங்கள் 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். ஆனால் கடந்த 6 வருடங்களாக போதிய சம்பளம் வழங்கப்படவில்லை. தினந்தோறும் ரூ.190 முதல் 200 வரை மட்டும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் குடும்பத்தின் அன்றாட செலவுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது. இருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை பசியாற்றுவதில் எங்களது பங்கு இருக்கிறது என்பது மற்றொருபுறம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இனிவரும் காலங்களில் எங்களது சம்பளத்தை அதிகரித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
மன நிறைவு
சுசிலா சிவகங்கை: மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் நன்றாக இருக்கின்றது. பொன்னி அரிசியில் சமைத்துள்ளனர். காய்கறிகளும் நல்ல சுவையாக உள்ளது. அன்னதான கூடமும் மிகவும் சுத்தமாக உள்ளது.
முருகன் திருப்பரங்குன்றம்:- நான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். இங்கு நடைபெறும் அன்னதானம் கேள்விப்பட்டு இருவரும் டோக்கன் வாங்கி சாப்பிட்டோம். சாப்பாடு மிகவும் தரமாக உள்ளது. சாம்பார், ரசம், மோர் என அளவில்லாத சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் பக்தர்களுக்கு கூடுதலாக டோக்கன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சின்னப்பொண்ணு கண்ணனேந்தல்:- நான் மடப்புரம் அம்மனை தரிசிக்க அடிக்கடி வருவேன். இங்கு நடைபெறும் அன்னதானத்தை கேள்விப்பட்டு டோக்கன் வாங்கி வரிசையில் நீண்ட நேரம் நின்று வந்தேன். உள்ளே வந்து சாப்பிட்ட பின்புதான் தெரிகிறது வரிசையில் நிற்பதின் பெருமை. நல்ல சுவையான அளவில்லா சாப்பாடு. மிகவும் நிம்மதியாக இருக்கிறது. இந்த திட்டம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.