மரபணு மாற்ற கடுகு விதை உற்பத்திக்கு அனுமதி அளித்தது ஆபத்தானது - ராமதாஸ்
|மரபணு மாற்ற கடுகு விதை உற்பத்திக்கு அனுமதி அளித்தது ஆபத்தானது என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இது ஆபத்தானது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும்.
அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.