இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக்கப்பலை நிறுத்த அனுமதி: டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம்
|இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசு இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக்கொண்டு அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.
இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சகம், யுவான் வாங் 5 உளவுக்கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருகிற 16-ந் தேதி (நாளை) முதல் 22-ந் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
உடனடியாக இந்தியா இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.