நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; அய்யப்ப பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்
|நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அருவிகளில் நேற்று நீர்வரத்து சீரானது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கூட்டம், கூட்டமாக வந்து அருவிகளில் நீராடி மகிழ்ந்தனர்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்யவில்லை. பாபநாசத்தில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர்ப்புற பகுதியில் இருந்து வந்த தண்ணீர் தாமிரபரணியில் கலந்து ஓடியது. இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் இருகரையையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மழை இன்றி வெயில் அடித்ததால் நீர்வரத்து குறைந்து தாமிரபரணியில் வழக்கமான அளவில் தண்ணீர் ஓடுகிறது.