தேனி
திராட்சை தோட்டங்களில் பெண் தொழிலாளர்களுக்கு அனுமதி: ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
|கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை தோட்டங்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கம்பம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி நாராயணதேவன் பட்டி, ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி, கூடலூர் க.புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிக அளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடந்து வருகிறது. இந்த தோட்டங்களில் பெரும்பாலும் ஆண் தொழிலாளர்களே வேலை செய்து வந்தனர். மேலும் பெண் தொழிலாளர்களும் திராட்சை தோட்ட வேலைகளில் தீவிரம் காட்டி வந்தனர். இதனால் பெண் தொழிலாளர்களை திராட்சை தோட்ட வேலைக்கு அனுமதிக்க கூடாது என்று ஆண் தொழிலாளர்கள் விவசாயிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் தலைமை தாங்கினார். தாசில்தார் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். திராட்சை விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திராட்சை தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்வதை தடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு ஆண் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தில் கையொப்பமிடாமல் சென்று விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.