< Back
மாநில செய்திகள்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
1 April 2023 12:15 AM IST

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். முத்துசாமி பேசுகையில், ''தேனீக்கள் வளர்ப்பு பெட்டியை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

கூத்தப்பெருமாள் பேசுகையில், ''ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் கடந்த ஆண்டில் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிப்படைந்தது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பலாப்பழத்திற்கு காப்புரிமை

செல்லத்துரை பேசுகையில், ''காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது இல்லை. மாநில அரசு தான் நிதி ஒதுக்குகிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும். பலாப்பழத்திற்கு காப்புரிமை பெற வேண்டும். தென்னைக்கு இ-அடங்கல் வழங்க வேண்டும்'' என்றார்.

துரைமாணிக்கம் பேசுகையில், ''ஆவுடையார்கோவில் பகுதியில் மண் வளத்தை ஆராய்ந்து அதில் சிறுதானியங்கள் என்ன பயிரிடலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும். இருக்கிற மண் வளத்திற்கு ஏற்ப சிறு தானிய விவசாயத்தை மேற்கொள்ள முடியும்'' என்றார்.

ரமேஷ் பேசுகையில், ''மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். தாளக்குடி ஏரியில் உள்ள தைல மரங்களை அகற்ற வேண்டும்'' என்றார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

மாரிமுத்து பேசுகையில், ''மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்துகளில் உள்ள குளங்களின் மொத்த எண்ணிக்கை, இதில் தூர்வாரப்பட்டவை, தூர்வாரப்பட வேண்டிய குளங்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.

தனபதி பேசுகையில், ''பாரம்பரிய நெல் வகைகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் கிடைக்க செய்ய வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனக்குளங்களிலிலும் மராமத்து பணிகள் செய்யும்போது அந்தக் குளக்கரையில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவேண்டும். குளங்களின் நடுவே மேடுகள் அமைத்து அதில் குறுங்காடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

ரூ.666 கோடி நிதி ஒதுக்கீடு

இதேபோல் விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி பேசுகையில், ''காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 2023-2024-ம் நிதி ஆண்டில் புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த ரூ.554 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிகளை செயல்படுத்த ரு.112 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விரைந்து நிலம் கையகப்படுத்தி படிப்படியாக பணிகள் தொடங்கப்பட உள்ளது'' என்றார்.

கலெக்டர் கவிதா ராமு பேசுகையில், ''மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த விவசாயங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. சிறு தானியங்கள் பயிரிட ஏதுவாக மண் வளம் ஆய்வு மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்