திண்டுக்கல்
தார்சாலை அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு
|‘திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தார்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
வகுப்பறை கட்டிடம் திறப்பு
கன்னிவாடி அருகே முருநெல்லிக்கோட்டை ஊராட்சி ஆசாரிப்புதூரில் உள்ள அரசு பள்ளியில், கனிமவள நிதி மூலம் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் சிவ குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவிலேயே 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் மேலும் 32 நாட்களை கூடுதலாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
ரூ.600 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்டு ரூ.1500 உயர்த்தி வழங்க அவர் உத்தரவிட்டார். ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும் விரைவில் சம்பளம் உயர்த்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக தார்சாலை அமைக்க ரூ.600 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும். மண்சாலை இல்லாத தொகுதியாக ஆத்தூர் தொகுதி மாற்றப்படும்.
வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் ரெட்டியார்சத்திரத்தில் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்து விடும்.
இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக முருநெல்லிக்கோட்டை ஊராட்சி தலைவர் சின்னு என்ற முருகன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், மலைச்சாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், தி.மு.க. பொறுப்பாளர்கள் குமரேசன், கதிரயங்குளம் பாலன், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரங்கசாமி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.